திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3, 2026
சிறப்பு பதிப்பு தமிழ் செய்திகள் • உலகம் முழுவதும்

The Eelam times

தொகுதி 1 https://eelamtimes.de
தலையங்கம்

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இரு முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – முழு விவரம்

இலங்கையின் முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் நடக்கவிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமை, கடமை பொறுப்புகளை தவறியமை, மனித படுகொலைக்கு ஆதரவு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய, திலக்கரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய மேல் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணைகள் நடந்தன.https://flo.uri.sh/visualisation/25999072/embed?auto=1

இந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பூஜித் ஜயசுந்தர குற்றவாளி என்று பிரியந்த லியனகே, திலக்கரத்ன பண்டார ஆகிய பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை, மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி பிரியந்த லியனகே அறிவித்தார்.

அதில், ”ஈஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதல் நடாத்தப்பட இருப்பதாக முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறியமையின் ஊடாக, கடமைகளைத் தவறியுள்ளமையால், 268 பேர் உயிரிழந்ததுடன், 586 பேர் காயமடைந்திருந்தனர்” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்தக் காலப் பகுதியில் நாட்டின் போலீஸ் மாஅதிபராக பிரதிவாதி பூஜித் ஜயசுந்தர கடமையாற்றியிருந்தார். பிரஜைகளை பாதுகாக்கின்றமை, பொது மக்கள் பாதுகாப்பு ஆகியவை இவரது பொறுப்பு. எனினும், ஈஸ்டர் தினத்தில் கொழும்பு மற்றும் சனநெரிசல் அதிகமான பகுதிகளிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட இருப்பதாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி மாலை அப்போதைய புலனாய்வு சேவை பணிப்பாளர் திலங்க ஜயவர்தனவால் இந்தப் பிரதிவாதிக்கு வழங்கப்பட்டிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் நீதிபதி பிரியந்த லியனகே.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் நடமாடும் முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.
படக்குறிப்பு,கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் நடமாடும் முன்னணி ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன், உளவுத் தகவல் கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுப்பதற்கு இவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும், குற்றங்களைத் தடுப்பதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்ற வகையில் அவர் தமது பொறுப்பைத் தவறவிட்டு உள்ளதாகவும் நீதிபதி பிரியந்த லியனகே தீர்ப்பில் அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை வழங்கும் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. ஆயினும், மூவரடங்கிய நீதிபதிகள் குழாமிலுள்ள மற்றைய நீதிபதி விராஜ் வீரசூரிய தனது தனிப்பட்ட தீர்ப்பை அறிவித்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதி மீதான குற்றச்சாட்டுகள் சாதாரண சந்தேகத்திற்கு அப்பால் சென்று உறுதி செய்யப்படாமையால், அவரை விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக முன்கூட்டியே உளவுத்துறையின் எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை, கடமையை அலட்சியம் செய்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு, கொழும்பு விசேட மூவர் நீதிபதிகள் கொண்ட விசாரணை அமர்வின் பெரும்பான்மை நீதிபதிகள் ஜூலை 31ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.

2019ம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டி சமூக ஆர்வலர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம். ( கோப்புப்படம்)
படக்குறிப்பு,கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டி நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்ட ஈஸ்டர் தினத்தில் இந்தத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன.

மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன.

இந்தத் தாக்குதல்களில் 268 பேர் பலியானதுடன், 586 பேர் காயமடைந்தனர். தேசிய தவ்ஹீத் ஜமாஆத் அமைப்பால் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டதாகப் பின்னர் உறுதி செய்யப்பட்டது.

எட்டு தற்கொலை குண்டுதாரிகளால் நடாத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், 40 வெளிநாட்டவர்களும், 45 சிறார்களும் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்து வந்த 30 ஆண்டுக்கால யுத்தம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பிறகு, இலங்கையில் நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் கருதப்படுகிறது.

1 கருத்து

கருத்து தெரிவிக்க